Wednesday, January 28, 2015

நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும்.
இது ஒவ்வொருவரின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுப்படும். மூன்றே நாளில் உங்களின் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். இதோ, அதற்கான வழிகள்.


* சுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு வரும்போது முதலில் பால் பொருட்கள் அனைத்தையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

* முதல் நாளுக்கு முன் இரவு தூங்க செல்லும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும்.  இது உடலிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

* முதல் நாள், காலை உணவுக்கு முன்பு 300 மில்லி நீரில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிக்கலாம்.

* இரண்டாம் நாள், காலை வேளையில் அன்னாசி பழ சாறை அருந்தலாம்.

* மூன்றாம் நாள், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 300 மில்லி கேரட் ஜூஸை குடிக்கலாம்.

* உண்ணும் உணவில் அதிகமான பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும்.  மூலிகை டீ குடிப்பதால் நுரையீரலில் எந்த தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

* தினமும் 20 நிமிடங்கள் குளிப்பதால் உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறும். வியர்வையின் மூலமாக நச்சுக்களும் வெளிவரும். காலை மற்றும் மாலை என குளிப்பதை 10 நிமிடங்களாக பிரித்துக் கொள்ளலாம்.

* 5 துளி யூக்கலிப்டஸ் தைலத்தை நீரில் விட்டும் குளிக்கலாம். வாரம் ஒருமுறை யூக்கலிப்டஸ் தைலத்தை 2 நிமிடங்கள் வரை சுவாசிக்கலாம்.

Tuesday, January 13, 2015

திருமணத்தில் வீடியோ எடுக்கலாமா, உரை நிகழ்த்தலாமா?

திருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வீண் விரயங்களைச் செய்யலாமா? நபி (ஸல்) அவர்களைக் கூட அழைக்காமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் போன்ற நபித்தோழர்கள் திருமணம் முடித்துள்ள போது, நம் திருமண நிகழ்ச்சிகளில் குத்பா நிகழ்த்துவது சரியா? திருமணத்தில் குத்பா நிகழ்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதேனும் உள்ளதா?

திருமணங்களில் வீடியோ, போட்டோ போன்ற காரியங்களைச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதைக் கடந்த இதழில் "வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்' என்ற கட்டுரையில் விளக்கியுள்ளோம். திருமணத்தை வீடியோ எடுக்கவில்லை, சொற்பொழிவுகளை மட்டும் வீடியோ எடுக்கிறோம் என்று சிலர் கூறினாலும் உண்மையில் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளை எடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
எளிமையான திருமணத்தில் தான் பரக்கத் இருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இந்த வீடியோ கலாச்சாரத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
நபி (ஸல்) அவர்களுக்குக் கூட தெரியாமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் திருமணம் நடத்தியிருப்பதால் திருமண உரை நிகழ்த்துவது சரியா என்று கேட்டுள்ளீர்கள். 
குத்பா என்று சில வாசகங்களைக் குறிப்பிட்டு, இவற்றைக் கூறினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் விளங்கி வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கும் பிரசங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பிரசங்கம் எதுவும் நிகழ்த்தாவிட்டாலும் திருமணம் நிறைவேறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் அதே சமயம் திருமணத்தில் உரை நிகழ்த்தப்படுவதை மார்க்கத்திற்கு முரணான செயலாகச் சித்தரிப்பதும் தவறு.
பொதுவாக அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் செய்தியை அடிப்படையாக வைத்து, திருமணத்திற்கு யாரையும் அழைக்கக் கூடாது, யாருக்கும் தெரியாமல் திருமணம் நடத்த வேண்டும் என்ற கருத்து ஏகத்துவவாதிகளிடம் பரவலாக உள்ளது. 
திருமணத்தை நீங்கள் அறிவியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), 
நூல்: அஹ்மத் 15545 

இந்த ஹதீஸில் திருமணத்தை அறிவியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதே பலருக்கும் தெரியும் வகையில் திருமணம் நடத்தப் படவேண்டும் என்பதையே காட்டுகின்றது. தற்போதுள்ள நடைமுறையில் இருப்பது போல் பலரையும் அழைத்து திருமணம் நடத்துவது மார்க்க அடிப்படையில் சரியான செயல் தான் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிய முடியும். இவ்வாறு செய்வதால் அதை செலவு குறைந்த திருமணம் இல்லை என்று யாரும் கூறி விடமுடியாது. மேள தாளங்கள், மேடை அலங்காரங்கள், ஆடியோ வீடியோ கலாச்சாரம் போன்ற அனாச்சாரங்களைக் கூடாது என்று கூறலாம். ஆனால் யாரையுமே அழைக்கக் கூடாது என்று கூறுவது மார்க்க அடிப்படையில் ஏற்புடையதல்ல! 

3 சிசுக்கள் தொடர்ச்சியாக இறந்துவிட்டால் தாய்க்கு சொர்க்கம் கிடைக்குமா?


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உரைகளை (பெண்கள் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். ஆகவே நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நிர்ணயித்து விடுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே பெண்கள் ஒன்று திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து போதித்தார்கள். பிறகு, "உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வரும்) முன்பாக தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும்'' என்று கேட்டார். இதை அப்பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, "ஆம்! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), 
நூல்: புகாரி 7310

புகாரியின் 102வது அறிவிப்பில் பருவ வயதை அடையாத குழந்தைகளை.. என்று இடம் பெறுகின்றது. இந்த அறிவிப்புக்கள் ஆதாரப்பூர்வமானவை தான்.

தான் மரணிப்பதற்கு முன் தனது குழந்தைகளை இழக்கும் பெண்ணுக்கு என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே இது பிறந்த சிசுக்களையும் உள்ளடக்கும்.

கப்ரு வேதனையில் பாகுபாடு உள்ளதா?

ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனையில் பாகுபாடு உள்ளதே?

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர் அவர் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ரில் வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.
ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்கு பத்து நாள் தண்டனை என்பதும், இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்று கேட்டுள்ளீர்கள்.
பொதுவாக இது தான் இறைவனின் ஏற்பாடு என்பது தெரிந்த பின்னர் அதில் நாம் கேள்வி கேட்கக் கூடாது. எனினும் இதற்கான விளக்கம் ஹதீஸ்களில் உள்ளது.
உலகில் ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும் போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர் தான் முதன் முதலாகக் கொலை செய்து (ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 3335
நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
பாவத்தைப் பொறுத்த வரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செல்கிறான். தனக்குப் பின்னுள்ளவர்கள் அப்பாவத்தைச் செய்வதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறான்.

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

"பொம்பள சிரிச்சாப் போச்சு'' என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.
ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வலியுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
(அல்குர்ஆன் 33:32)
அதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக் கூறுகின்றான்? சதாவும் வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்?
அல்லாஹ் பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

பண்டிகை காலங்களில் பூஜை செய்யாத உணவை மாற்று மத சகோதரர்கள் கொடுத்தால் அதை சாப்பிடலாமா?

சாமிக்குப் படைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்குத் தான் தடை உள்ளது. படைக்கப்படாத பொருட்களை சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. மாற்று மதத்தினர் எல்லோருமே சாமிக்குப் படைப்பதற்காக உணவுகளைத் தயாரிப்பது கிடையாது. அந்த நாளில் சந்தோஷமாக இருப்பதற்காக பலகாரங்கள் தயாரித்து அதை நண்பர்களுக்கு வழங்குவார்கள். இந்த அடிப்படையில் இருந்தால் அதை சாப்பிடுவதில் தவறில்லை.

மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப் பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.

ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.


ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது. “இப்போ வலி போயிடிச்சா” அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள். பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள்.

ஆமாம். இது உண்மை.